சங்க காலத்து அக வாழ்வும்,
இல்லற மாண்பும் (தேர்நிலைச் செய்யுள்களினூடான நோக்கு).
ஆண் – பெண்களிடையேயான இடைத்தொடர்புகளையும்; ஒழுக்கங்களையும் காதலன் – காதலி, தலைவன் – தலைவி அல்லது கணவன் – மனைவி எனப் பல கோணங்களில்
சங்ககால அகத்திணைச் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன. கதை மாந்தர்களது மோதல்
காதல், மீளல் உணர்ச்சிகளையும்; குடும்ப வாழ்வியலையும்
சொல்லோவியங்களாகக் காட்டுவதில் இவ்வகத்திணைப் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு.
இக்காலத்தில் இல்லற வாழ்வும் கற்பொழுக்கமும் நெறிமுறைகளுக்குட்பட்டும், அதற்கப்பாற்பட்டும் காணப்டுகின்றன. ஒரு முறையான திருமண வாழ்வுக்கு முன்னர்
களவொழுக்கத்திற்கு முக்கியத்துவங்கொடுத்த பல பாடல்களையும் காண முடிகின்றது.
இதனாலேயே சங்ககாலத்தில் நிலவிய மண முறைகளை பிரதானமாக களவு மணம், கற்பு மணம் சான்றோர் பலர் பகுத்தளித்துள்ளனர். களவொழுக்கமும் அதன் வகைப்பட்ட உறவினையும்
பிற்கால மக்கள் வெறுத்ததன் விளைவாகவே சங்கமருவிய காலத்தில் (உலகியலும் அதன்
ஈடுபாடும் பழிக்கப்பட்டு) அறவொழுக்கம் போற்றப்படலாயிற்று.
களவு மணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் பெற்றோருக்கும் மற்றோருக்கும்
தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் முறையினைக் குறிக்கின்றது. சங்க காலம்
காதலுக்கு மரியாதை தந்த காலம் என்பதனால் தான் என்னவோ பெற்ருறோம் மற்ருறோம் தம்
விருப்பத்திற்கு எதிராக இருந்தால் பெண்ணொருத்தி அவர்களுக்குத் தெரியாமல்
காதலனுடன் சென்று வாழ்வதனை அக்காலத்துப் பெரியோரும்; புலவரும் மறைமுகமாக ஆதரித்துள்ளனர். இதனாலேயே பெண் இன்னொரு ஆணுடன் செல்லும் செயலை ‘ஓடிப் போதல்‘ என்று எம்மவர் போல சொல்லாமல் ‘உடன்போக்கு‘ எனக் கௌரவமாகவும்
நாகரீகமாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என ஊகிக்க முடிகிறது.
‘நினையாய் வாழி தோழி....’ என வரும் குறுந்தொகையின்
முன்னூற்று நாற்பத்து மூன்றாவது (343) பாடலில் ‘உயர்வரை நாடனொடு பெயருமாறே...’ என தோழி தலைவியின் களவுறவினை அறிந்தும் அதன்
பின்னர் அவள் இல்லத்தார் அத்தலைவனுக்கு அவளை வாழ்க்கைப்படுத்த இசையமாட்டர்கள்
என்பதனை உணர்ந்தும் வீட்டை விட்டகன்று தலைவனுடன் சென்று அவனூரிலேயே அவனை மணந்து
வாழ்தலே செய்யத்தக்கது என்பதனை தலைவிக்கு எடுத்துக் கூறுகிறாள்.
அத்துடன் ஒத்த அன்புடைய ஆணும் பெண்ணும் எவ்வித
உறவுமின்றி ஒருவரின் பெற்றோரை இன்னொருவர் அறிந்ததுமின்றி தாமாகவே சந்தித்து
மனமொத்து இரண்டறக் கலந்துவிட்ட நிலையினை குறுந்தொகையின் நாற்பதவது (40) பாடல் எடுத்துக்கூறுகிறது,
" யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே "
இங்கு தலைவன் தலைவி இருவரும் பிரிக்க முடியாத
படி ஒன்றாகக் கலந்து விட்டனர் என்பதற்கே காதலன் ‘செம்புலப் பெயல்நீர் போல’ எனும் உவமையைக்
கூறுகிறான்.
இவ்விதம் சங்க காலத்தில் களவொழுக்கம் தலை
தூக்கியமையினால் உண்டான பல அவலங்களையும் சீரழிவுகளையும் பாக்களின் வாயிலாக
ஆங்காங்கே காணமுடிகிறது.
அவ்விதம்,
‘யாரும் இல்லை தானே களவன்
தான் அது பொய்ப்பின்; யான் எவன் செய்வோ?....’ (குறுந்தொகை - 25)
எனும் பாடலில் தலைவன் தலைவியை களவுறவில்
சந்திக்க பொய்யாக சூளுரையும் செய்து இன்பம் கொண்டான்; அதற்கு சன்றாவரும் இல்லை
இனி நான் என்ன தான் செய்வது என கன்னித்தாய் ஒருத்தி இரங்குகிறாள்.
அத்துடன் குறுந்தொகையின் இன்னொரு பாடலில்
(நக்கீரர் -105)
‘சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணோடு நினைப்பாகின்றே’
எனும் வரிகளில் தலைவியானவள் தலைவனோடு
இணைந்திருந்த காலத்தினையும் அவ்விணைப்பினால் அவர்களுக்கிடையே உண்டான புது உறவினையும்
எண்ணி மலை நாட்டினனான தலைவனது நட்பானது நீர் மிகுந்த கண்களோடு வெறும் நினைப்பாகவே
அமைந்து விட்டதே என அங்கலாயித்துக் கொள்வதும் நோக்குதற்குரியது.
மேற்போந்த வகையில் சங்ககாலத்தில் நிலவிய
களவொழுக்கம் அல்லது களவு மணத்தினை மட்டும் எடுத்து நோக்கி சங்ககால அகத்திணை
வாழ்வின் அம்சங்களை தட்டிக்கழிக்கவியலாது. காரணம் இக்காலத்துள் கற்பு மணமும்
சிறந்த இல்வாழ்க்கையும் பரவலாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இனி அவற்றை எடுத்து
நோக்கலாம்.
பெண்ணின் பெற்றோரும் ஆண்மகனின் பெற்றோரும்
ஒருவரோடொருவர் கலந்து பேசி உற்றாரும் ஊராரும் எனப்பேசி பலபேர் அறிய இரு வீட்டாரும்
இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் திருமணமே சமூக ஒப்புதலுடன் கூடியது என பொதுவாக
ஏற்கப்பட்டுள்ளது.
“ கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினர் கொடுப்பக் கொள்வதுவே “
எனத் தொல்காப்பியர் இத்திருமண முறையினையே
எடுத்துக் காட்டுகிறார்.
இங்கு ‘கொளற்குரி மரபினர்’, ‘கொடைக்குரி மரபினர்’ என்பது முறையே ஆணின் பெற்றோரையும்,
பெண்ணின் பெற்றோரையும் குறிக்கிறது என நச்சினார்க்கினியார் பொருள் உரைக்கிறார்.
அத்துடன் பெற்றோர் அறியா வண்ணம் தலைவி
தலைவனுடன் செல்லுதல் சாதாரணமாக நிகழ்ந்ததனால். காலப்போக்கில் தான் விரும்பிக்
கரம்பிடித்த தலைவியையே விட்டு வேற்றாளை நாடிய நிலைகள் அதிகரிக்கலாயின. இதனாலேயே
ஊரறிய சமூகத்தவரறிய திருமணம் இடம்பெறல் வேண்டும் என்பதன் அவசியம் எடுத்துக் காட்டப்பட்டது.
இதனையே தொல்காப்பியர்,
‘கொடுப்போர் இன்றிக் கரணமுண்டே
புணர்ந்துடன் போகிய காலையான…’ (கற்பியல் 2) என்றும்;
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணமென்ப....(கற்பியல் 4) என்றும் கூறுகிறார்.
பண்டைத் தமிழகத்தில் நெறியிழந்த களவுமுறை வாழ்வு கற்பு முறையாகிய
திருமணத்திலேயே முடிந்தாக ஆய்வாளர் பலர் கூறுவர். கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
கூறுவதன் படி ஒத்த நிலத்தலைவனும் தலைவியும் இவ்விதம் உறவாடினால் அவ்வுறவு கற்பு
மனத்தில் முடிவதில் சிக்கல்கள் உண்டாகவில்லை என அறியக்கிடக்கின்றது.
காதல் வாழ்க்கையின் போதும் சரி களவு
வாழ்க்கையின் போதும் சரி திருமண வாழ்வின் முக்கியத்தும் பற்றி பல பாடல்கள்
கூறுகின்றன. குறுந்தொகையின் மூன்றாவது பாடல் கீழ்வருமாறு கூறுகிறது,
"நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்ததன்று
நீரினும் ஆர் அள வின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டுஇ
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே..."
(வளப்பம் பொருந்திய மலை நாட்டினான) தலைவனுடன் செய்த நட்பானது
நிலத்தைக் காட்டினும் அகலத்தால் பெரியதாகும். நினைப்பின் அது வானைக் காட்டினும்
உயர்ச்சியில் உயர்ந்ததாகும், உள்ளே எல்லை காணப்புகுந்தால் கடல் நீரினைக்
காட்டினும் அது ஆழமானதாகும் எனத் தலைவனிடம் கூறும் தோழி தலைவன் தலைவியின்
பெருங்காதலை உணர்ந்து அவளை விரைவில் மணந்து தமது இல்லற வாழ்வில் தம் மனங்களைச்
செலுத்த வேண்டும் எனக் கூறுகிறாள். இதனூடே திருமண வாழ்வின் ஒழுக்கத்தினையும்
மாண்பினை உணர்ந்த தோழி அத்தகைய அன்பானது நிலைக்க திருமணம் மேற்கொள்ளலே உசிதமனதெனக்
கூறினாள்.
குறிஞ்சி நிலத்தினைச் சுட்டும் குறுந்தொகையின்
இருபத்தொன்பதாவது (29) பாடலில் நீண்டகாலமாக தலைவியினை இரவுக் குறி மூலமாக தனிமையில்
சந்தித்து வந்த தலைவனிடம் அவன் விரைவில் வரைவு கடாவ (திருமணம் மேற்கொள்ள) வேண்டும்
எனக் கூறுகிறாள். இவ்விதமாக நெறிமுறையான இல்லற வாழ்வினை வலியுறுத்தும் பல்வேறு
பாக்களை காண முடிகிறது.
திருமணத்தின் பின்னரான
இல்லற வாழ்க்கை
இல்லறவியல் (இல்+அறம்+இயல்) என்பது சிறந்த
இல்லமொன்று வளம்பெற, நிலை பெற அதன் உறுப்புக்கள் யாவன செய்தொழுக வேண்டும் எனக்
கூறும் கலையாகும். எவ்விதம் சட்டவியல், கணிதவியல், உயிரியல், மெய்யியல்
என்பனவெல்லாம் அத்துறை சார் விடயங்களை எடுத்தாராய்கின்றனவோ அது போல இல்லத்திற்கான
அறங்களை எடுத்தாராயும் கலையாக இது உள்ளது.
திருமணத்தினை தொடக்கமாகக் கொண்டு வீட்டின்
நல்லறங்கள், கணவன் - மனைவியரிடையான இடைத்தொடர்புகள், அவர்களுக்கிடையேயான உரிமைகள்,
கடமைகள், மக்கட்பேறு முதலான விடயங்களை சிறப்புற வடிவமைத்துக் கொள்வதே இல்லறவியலின்
நோக்காகும். இல்லறம் இல்வாழ்க்கை தொடர்பான விடய ஆய்வு சமூக விஞ்ஞானிகளால் மட்டுமின்றி
இலக்கியவாதிகளாலும் ஆராயப்பட்டிருக்கிறது.
வள்ளுவர் திருக்குறளில் இத்தகைய ஒரு விரிவான
ஆய்வினையே இல்லறவியல் எனும் பகுதியில் புரிந்திருக்கிறார்;. ஒரு சிறந்த இல்லற
வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களை இல்வாழ்க்கைஇ வாழ்க்கைத்துணை நலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல். நடுவு நிலைமை,
அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறனில்
விழையாமை (பிறர் மனை நோக்காமை), பொறை உடைமை அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை,
பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவு அறிதல், ஈகை மற்றும் புகழ் முதலான
விடயங்களை எடுத்துக் கூறுகின்றார்.
சங்கச் செய்யுள்கள் பலவும் இத்தகைய
நல்லறங்களைப் போதிக்கின்றன.
கணவன் மனைவி என்பார் என்றும் பிரியாத பேருறவு
கொண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும் எனக் கூறும் குறுந்தொகையின் நாற்பெத்தொன்பதாவது (49) பாடல் கீழ்வருமாறு வருகிறது,
“....இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகிர் என் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே“.
தலைவனை நம்பி வந்த தலைவியரை காத்தொழுகுவதும்; தலையளி செய்வதுமே
தலைவரின் உண்மையான வீரமென நற்றினையின்
இருபத்தாறாவது (26) பாடல் கூறுகிறது.
இப்பாடலில் தலைவன் தலைவியை சிறிது காலம் பிரிந்திருக்க நாடிய வேளை தோழி தலைவியின்
நிலையினை எடுத்துக் காட்டி கூறுவதாவது “ நெல்வளமும்; இதர வளமும் நிரம்பியது தலைவியின் தாய்மனை. அத்தகைய மனையினை
விட்டு கனல் விட்டெரியும் பாலை நிலத்தினைக் கடந்து பல சிரமங்களுக்கு மத்தியிலும்
உன் புறத்தே வந்தவள் தலைவி. இவளுக்கு உன் பிரிவைக் கேட்டதுமே வளையல்கள் கழன்று
விடும்படி சோர்ந்து விட்டாள். ‘உன்னோடு பின் தொடர்ந்து வந்தமைக்கு உண்டாவது இதுவோ?’ ‘’ எனத் தௌpவித்து நீ தலைவியினைச்
சேர்ந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறாள்.
‘ பொங்கு திரைப் பொருத வார் மணல் அடைகரைப்
புன்கால் நாவல்...’
என வரும் நற்றினை (35) பாடலில் தோழியொருத்தி புதுமணத் தம்பதியினரை வாழ்த்தி வரச்
சென்றாள். அங்ஙனம் வாழ்த்திய தோழி தலைவனை விளித்து களவுக் காலத்திலே தலைவியுடன்
உரிமை கொண்டு தமரருடன் பகையும் கொண்டு இறுதியில் தலைவியை கைக் கொண்டாய் அதற்கு
காரணம் களவுக் காலத்திலே நீ அவள் மீது கொண்ட அளப்பரிய அன்பேயாகும். இதுவரை காலும்
அவ்வன்பு குறையவில்லை எனினும் உன் சிறு பிரிவையும் தலைவி தாங்காள் எனக்கூறி
இன்னும் நெருக்கமாக அன்பு செய்வாயாக என வாழ்த்துரைக்கிறாள்.
குறுந்தொகைப் (167) பாடலில் இன்னொரு காட்சி பதிவாகியுள்ளது. திருமண
வாழ்க்கையின் பின் கூடி வாழ்க்கை செய்த தலைவன் தலைவியைக் காணும் பொருட்டு
செவிலித்தாய் அக்குறித்த தலைவன் – தலைவி மனைக்குச் சென்று அவள் கண்ட காட்சியை நற்றாய்க்கு
பின்வருமாறு கூறுகிறாள்;
“ முளிதயிர் பிசைந்த காந்தன் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உன்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே ! “
புதிதாக திருமணம் செய்த தலைவி தனது கணவனுக்கு
தன் கையினாலேயே சமைத்துப் பரிமாற எண்ணி சமையலில் முன் அனுபவத்தினையும் கருத்திற்
கொள்ளாது முனைகிறாள். அதன் பொருட்டு தயிர்க் குழம்பினை தயார் செய்கிறாள். முற்றிய
தயிர் கட்டியைக் கையால் பிசைந்து கையைக் கழுவாமல் அப்படியே தன் தூய ஆடையில்
துடைத்துக் கொண்டாள். குழம்பினைத் தாளிக்கும் போது அடுப்பிலிருந்து வந்த புகையானது
அவளது குவளை மலரைப் போன்ற மை பொருந்திய கண்களை கலங்கச் செய்தது. இவற்றையெல்லாம்
பொருட்படுத்தாது தான் துழாவிச் செய்த இனிய புளிக்
குழம்பினை தன் கணவனுக்கு உண்ணக் கொடுக்கிறாள். கணவனோ அக்குழம்பினை ‘இனிது’ எனப் பாராட்டியபடி
உண்கிறான். இதனால் ஒளி பொருந்திய நுதலை உடைய தலைவியின் முகம் சந்தோச ஒளி
பூணுகிறது. இவ்விதம் மனைவியரை ஆற்றுவிக்கும் தலைவர்களையும் சங்க காலப் பாடல்கள்
படம் பிடித்துக் காட்டுகின்றன.
திருமணத்தின் பின்னரான
கணவனின் பிரிவும் மனைவியின் இல்லற ஒழுக்கமும்
குடும்பத்தின் தலைவனான கணவனே பொருளீட்டலில்
ஈடுபட்டு தேவைகளை பூர்த்திப்பவனாக உள்ளான். சங்க காலத் தலைவர்களும் இப்பொருளீட்டல்
நோக்கங்களுக்காக வெளியில் செல்ல வேண்டி இருந்தது. அக்கால சூழ்நிலையில் ஆடவர்கள்
இந்நோக்கங்களுக்காக தலைவியரை விட்டு தூர இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.
இத்தகைய நேரங்களில் தலைவியரை பிரிவுத் துயர் வதைப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன.
இதனால் தலைவர் அவரை விட்டும் போகாதிருக்க இரங்கிய சந்தர்ப்பங்களையும் இலக்கியங்கள்
காட்டுகின்றன.
குறுந்தொகையில் (57) தலைவி கூற்றாக வரும்
பாடல் ஒன்றில் தலைவனைப் பிரிந்து நாம் வருந்துவதை விட அவர் பிரிந்த மாட்டிலே எம்
உயிர் பிரிவது சிறந்தது எனக் கூறுகிறாள்.
‘கருங்கால் வேம்பின் ஒண்பூ
யாணர்
என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ..’
என வரும் இன்னொரு பாடலில் கணவன் வேம்பு பூக்கும் பருவத்து இளவேனில் காலத்தில் தலைவியை வந்தடைவதாகக் கூறிச் சென்றான். அக்காலம் வந்தும் தலைவனின் வராமையினைக் கண்டும்; அது பற்றி அநாவசிய பழி உரைக்கும் அயலவர் பற்றியும் தலைவி அங்கலாயித்துக் கொள்கிறாள்.
என வரும் இன்னொரு பாடலில் கணவன் வேம்பு பூக்கும் பருவத்து இளவேனில் காலத்தில் தலைவியை வந்தடைவதாகக் கூறிச் சென்றான். அக்காலம் வந்தும் தலைவனின் வராமையினைக் கண்டும்; அது பற்றி அநாவசிய பழி உரைக்கும் அயலவர் பற்றியும் தலைவி அங்கலாயித்துக் கொள்கிறாள்.
இவ்விதம் பிரிவுத் துன்பத்தோடு இருக்கும்
இல்லத்தரசிகளின் பிரிவாற்றாமை பல இடங்களில் கூறப்பட்டாலும் அவர் யாவரும் தனது
கணவனுக்கும் இல்லத்திற்கும் மாசு விளைவிக்கா கற்புக்கரசிகளாகவே இருந்துள்ளமையினைக்
காணலாம்.
குறுந்தொகையில் (61) தும்பிசேர் கீரனின்
பாடலில் தலைவன் தலைவியை விடுத்து பரத்தையரிடம் சென்று தங்கிவிட்டான். இதன் போது
தலைவனின் தூதாக பாணர் முதலியோர் தலைவியிடம் வந்த போது, தோழி அவர்களை மறித்து
தலைவியின் மாண்புகளை எடுத்துக் கூறுவதாய் பாடல் அமைந்துள்ளது. தலைவன் அவளை விட்டுப் பிரிந்த போதும்
கற்பொழுக்கத்தோடு அவனையே நினைத்து இன்புற்றாள் தலைவி எனக் கூறுகிறாள்,
‘.... உற்று இன் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனம் செறிந்தன வளையே ‘
தலைவனை மெய்யுற்று இன்பமடையாவிட்டாலும் அவன்
நட்பினை மேலும் மேலும் வளர்த்து (உளமாற) இன்புற்றோம். அதனாலேயே (மெலிந்து விடாமல்)
கை வளையல்கள் கழறா வண்ணம் கையில் இறுகி அமைத்துள்ளன என்றாள்.
இதனூடே தலைவர்களது செயல்கள் நெறி தவறினும்இ
அவ்விதம் நெறி தவறாப் பாத்திரங்களாகவே பெண் மாந்தர் வருணிக்கப்பட்டுள்ளனர். இவை
சிறந்த அறப் போதனைகளாகும். மறுபுறம் மகளிரைப் போல ஆடவரும் தம் கற்பொழுக்கம் பேணி
ஒழுக வேண்டும் என்ற நற்போதனையும் இங்குண்டு. ஆண்களும் கற்புடையோராக வாழ வேண்டும்
என்பது அதன் பொருளாகும்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ.
‘பிறன்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்’ எனவும்,
வள்ளுவர் பெருந்தகை ஆண்களை நோக்கி வரைவின்
மகளிர் – பரத்தைரிடம் செல்லாதே,
பிறனில் விழையாமை - பிறன்மனை நோக்காதே
என்கிறார். அத்தோடு வாழ்க்கைத் துணைநலம் எனும் ஒரேயொரு அதிகாரத்தின் மூலம்
பெண்ணுக்குரிய கற்பினை வலியுறுத்தும் வள்ளுவர் இரண்டு அதிகாரங்களில் (வரைவின்
மகளிர், பிறனில் விழையாமை) அதாவது இருபது குறள்களில் ஆணுக்குரிய கற்பினை வலியுறுத்துகிறார்.
மக்கட்பேறும் இல்லறமும்
திருமண வாழ்வில் இல்லறம் பேணி மகிழ்வுற
மக்கட்பேறும் இன்றியமையா ஒன்றாகும். புறநானூற்றின் (188) பாடலொன்று மக்கட்பேறின்
மகிமையை எடுத்துக் காட்டவல்லது
பலவற்றையும் படைத்துப் பல்வேறு நபர்களுடன்
இணைந்து அமர்ந்துண்ணும் ‘உடைமை’ எனப்படும் செல்வம்
பெற்றவராயினும் என்ன? மெல்ல மெல்லக் குறு நடை
நடந்து சென்று தம் சிறிய கைகளை நீட்டி விளையாடும் மழலை மொழி கேளாதவருக்கு வாழ்
நாளெல்லாம் பயனற்ற நாட்களே என்கிறது அப்பாடல்.
மேற்கண்ட வகையிலாக எம் ஊங்கணோர் வாழ்வியல்
ஒழுக்கங்களை இல்லத்து நல்லறங்களை அவர் விதைத்த அருஞ் சரக்குகளை
எடுத்துயம்புவதும்; வாழ்வில்
கடைப்பிடிப்பதும் பயன் தருவனவாகும்.
ஊசாத்துணைகள்
- குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க் கேசிகன், பாரி நிலையம் - சென்னை, 1978
- நற்றினை தெளிவுரை, புலியூர்க் கேசிகன்இ பாரி நிலையம் - சென்னை
- உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள், எம்.நாராயண வேலுப்பிள்ளை, நர்மதா பதிப்பகம்
கருத்துகள்
கருத்துரையிடுக