சங்க காலத்து அக வாழ்வும், இல்லற மாண்பும் (தேர்நிலைச் செய்யுள்களினூடான நோக்கு). ஆண் – பெண்களிடையேயான இடைத்தொடர்புகளையும் ; ஒழுக்கங்களையும் காதலன் – காதலி, தலைவன் – தலைவி அல்லது கணவன் – மனைவி எனப் பல கோணங்களில் சங்ககால அகத்திணைச் செய்யுள்கள் எடுத்துக் காட்டுகின்றன. கதை மாந்தர்களது மோதல் காதல், மீளல் உணர்ச்சிகளையும் ; குடும்ப வாழ்வியலையும் சொல்லோவியங்களாகக் காட்டுவதில் இவ்வகத்திணைப் பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு. இக்காலத்தில் இல்லற வாழ்வும் கற்பொழுக்கமும் நெறிமுறைகளுக்குட்பட்டும், அதற்கப்பாற்பட்டும் காணப்டுகின்றன. ஒரு முறையான திருமண வாழ்வுக்கு முன்னர் களவொழுக்கத்திற்கு முக்கியத்துவங்கொடுத்த பல பாடல்களையும் காண முடிகின்றது. இதனாலேயே சங்ககாலத்தில் நிலவிய மண முறைகளை பிரதானமாக களவு மணம், கற்பு மணம் சான்றோர் பலர் பகுத்தளித்துள்ளனர். களவொழுக்கமும் அதன் வகைப்பட்ட உறவினையும் பிற்கால மக்கள் வெறுத்ததன் விளைவாகவே சங்கமருவிய காலத்தில் (உலகியலும் அதன் ஈடுபாடும் பழிக்கப்பட்டு) அறவொழுக்கம் போற்றப்படலாயிற்று. களவு மணம் எ...